கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 16 ஆனது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் தான் நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 335 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலி ஆகி உள்ளனர்.
இதில் ஒருவர் மும்பையை சேர்ந்த 75 வயது முதியவர். இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் மும்பையை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
மற்றொருவர் பால்கரை சேர்ந்த 50 வயது நபர் ஆவார். இவர் வெளிநாட்டு பயணம் எதையும் மேற்கொள்ளாதவர். பால்கரில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர் ஆவார்.
இதேபோல கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் 46 வயது பெண் பாங்காக் சென்று கடந்த மாதம் 10-ந் தேதி திரும்பியுள்ளார். உடல் நலக்குறைவால் கடந்த 30-ந் தேதி உள்ளூர் டாக்டரை அணுகியபோது, அவர்கள் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் சேருமாறு அறிவுறுத்தினார். அங்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இவர்கள் 6 பேர் உயிரிழந்ததன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆகி உள்ளது.