ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரம்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு,
கவுந்தப்பாடி பழனிச்சாமி வீதியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கவுந்தப்பாடி சத்தி சாலை, சரவணாநகர், தம்பி நகர், நேருநகர், காந்திபுரம், 10 மற்றும் 11-வது வார்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்று முக கவசங்களை வழங்கினார். முதியவர்கள், சிறுவர்களுக்கு முககவசங்களை அணிவிக்கவும் செய்தார். பெண் குழந்தைகளிடம், ‘வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். காய்கறிகள் வாங்கி வந்தால் சுடு தண்ணீர் போட்டு கழுவி பயன்படுத்துங்கள். ஒருவருக்கு ஒருவர் சமுதாய இடைவெளியை கடைபிடியுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.
மேலும் துப்புரவு பணியாளர்களுடன் அமைச்சர் கே.சி.கருப்பணன் வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளித்தார். அப்போது அவருடன் கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, துணைத்தலைவர் தீபிகா, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், கவுன்சிலர் பரமசிவம் மற்றும் ஊராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, பெருந்துறை ஐ.ஆர்.டி. அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி எல்லைக்குள் இருக்கிறது. இந்த மருத்துவ மனை இருக்கும் குன்னத்தூர் ரோடு, மருத்துவமனை வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் தங்கியுள்ள விடுதிகள் முதலான இடங்களில், கடந்த ஒரு வாரமாக, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 6 மணிக்கு பணிக்கு வரும் 42 துப்புரவு பணியாளர்களும், சீருடை மற்றும் முக கவசம் அணிந்து, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வரிசையாக போலீசார் போல அணிவகுத்து நிற்கிறார்கள். பின்னர், அவர்களுக்கு வருகைப்பதிவு எடுக்கப்படுகிறது அதன்பின்னர் அவர்கள் பெருந்துறை கொரோனா மருத்துவமனை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நோய் தொற்று தடுப்பு துப்புரவு பணிகள் குறித்த விளக்கங்களை, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கூறுகிறார். அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, அவர் உத்தரவு பிறப்பிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஐ.ஆர்.டி. மருத்துவமனை வளாகத்தில் இந்த 42 துப்புரவு பணியாளர்களும் கிருமி நாசினி தெளித்தல், மருத்துவமனை சாலை ஓரங்களில் தேங்கும் குப்பைகளை அகற்றுதல், அங்குள்ள சாக்கடைகளை சுத்தம் செய்தல் போன்ற துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில், கடந்த வாரமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணி, கொரோனா தொற்று நீங்கும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று பேரூராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
கொடுமுடியில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடி உள்ளது. இந்த வழியாக ஈரோடு வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் கொடுமுடி வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் அருள்ராஜ் தலைமையில் சுகாதாரப்பணியாளர்கள் ஈடுபட்டார்கள்.
கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், ஆவுடையார்பாறை ஊராட்சி செயலர் விஜயப்பிரியா மற்றும் சோதனைச்சாவடி போலீசார் உடன் இருந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி சார்பில் நேற்று காலை தினசரி காய்கறி சந்தையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் 2 பேர் கொரோனா வைரஸ் போன்று தலைகவசம் அணிந்து, ‘சுத்தமாக கை கழுவவில்லை என்றால் நான் பிடித்துவிடுவேன், மாஸ்க் போடவில்லை என்றால் பிடித்துவிடுவேன்’ என கூறி காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள காஞ்சிக்கோவில் பேரூராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாங்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு உண்பதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துக்கூறினர்.
தொடர்ந்து வார்டு எண் 5, மேற்கு ரத வீதி, அய்யன் வலசு ரோடு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடந்தது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் பார்வையிட்டார். மேலும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இந்த பணியை மொடக்குறிச்சி தொகுதி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிவகிரி மார்க்கெட், கிழக்கு ரத வீதி உள்பட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அப்போது கொடுமுடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைமணி, பேரூர் செயலாளர் ராமலிங்கம், தொடக்க வங்கி இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.