தாளவாடி அருகே குளத்தில் முதலை இருந்ததால் பொதுமக்கள் பீதி

தாளவாடி அருகே குளத்தில் முதலை இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Update: 2020-04-01 20:30 GMT
தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரம், தொட்டாபுரம், முதியனூர் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 4-க்கும் மேற்பட்ட குளங்களும் 5-க்கும் மேற்பட்ட குட்டைகளும் உள்ளன. இதில் குளங்களில் பாதியளவு நீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்த நிலையில் தொட்டாபுரம் குளத்தின் அருகே சிலர் நேற்று மாடுகள் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மாடுகள் அனைத்தும் மிரண்டு ஓடின. இதனால் அவர்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போது கரையில் முதலை கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து முதலையை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர். பொதுமக்களை பார்த்ததும் கரையில் இருந்த முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘குளத்தில் உள்ள முதலை இரவு நேரத்தில் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் முதலையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு சென்று விட வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்