திருபுவனை பகுதியில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாட்டம் - வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
திருபுவனை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடியதையடுத்து அவர்களை வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
திருபுவனை,
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் தொற்று உள்ளவர் களை தனிமைப்படுத்தி அவர் களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாடு திரும்பி உள்ளனர். அவர்களை சோதனை செய்து அரசு தனிமைப்படுத்தி உள்ளது. இப்படி வெளிநாட்டில் இருந்து திரும்பிய திருபுவனை, காரைக்கால், நிரவி, திருபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளியில் நடமாடுகிறார்கள். இது ஊரடங்கு உத்தரவை மீறுவதாகும். மேலும் அவர்களால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.
இதுபற்றி தெரியவந்ததும் வில்லியனூர் துணை தாசில்தார் நித்தியானந்தம் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாசு, அமிர்தலிங்கம், திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவது குறித்து புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் அந்த வீடுகளுக்கு நேரில் சென்று சுகாதாரமான சூழ்நிலை ஏற்படும் வரை தனிமையில் இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் திருபுவனை, திருவாண்டார்கோவில், மதகடிப்பட்டு, பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து புதிதாக யாரும் வந்துள்ளார்களா? என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.
திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வந்த 150க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களும், 50-க்கும் மேற்பட்ட டிரைவர்களும் வீடுகளில் அடைந்து கிடக்கிறார்கள். உணவின்றி அவர்கள் தவிப்பதாக கிடைத்த தகவலையடுத்து வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். இதன்பின் அவர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அந்தந்த தொழிற்சாலைகளை கேட்டுக் கொண்டனர்.
காரைக்கால், நிரவி, திருபட்டினம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் விதி மீறல்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். காரைக் கால் திருநள்ளாறு பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் தங்கி பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு திருநள்ளாறு காவல் நிலையம் சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், மீன், காய்கறி, மளிகை கடைகள், மார்க்கெட், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் சமூக விலகல் இன்றி கூட்டம் கூட்டமாக, ஒட்டி உறவாடி திரிகின்றனர். மக்கள் மத்தியில் அலட்சியமே மேலோங்கி சமூக விலகல் இன்றி சுற்றிவருகின்றனர். இதனால், கொரோனா வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு மற்றும் சமூக விலகலை காரைக்காலில் தீவிரப்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.