சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்
புதுவை கதிர்காமத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் திடீரென சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர சிகிச்சை பிரிவு அருகே நேற்று அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மருத்துவமனை நிர்வாகம் வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஊழியர்கள் ஏற்கவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கும்பலாக கூடி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் கோரிக்கை தொடர்பாக அவசரமான இந்த காலகட்டத்தில் எந்த விதமான உறுதிமொழியும் வழங்கமுடியாது என்று தெரிவித்தனர். அதையும் மீறி போராட்டத்தை தொடர்ந்தால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.