தேன்கனிக்கோட்டை அருகே, நோயுடன் போராடிய பெண் யானை சாவு - வயிற்றுக்குள் இருந்த குட்டியும் இறந்த பரிதாபம்
தேன்கனிக்கோட்டை அருகே நோயுடன் போராடிய பெண் யானை சிகிச்சை பலனின்றி செத்தது. அதன் வயிற்றுக்குள் இருந்த குட்டி யானையும் பரிதாபமாக இறந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது நொகனூர் வனப்பகுதி. இங்கு 10-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்தன. இந்த நிலையில் நொகனூரை அடுத்துள்ள ஆலள்ளி காப்புக்காட்டில் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு அந்த பகுதியில் சுருண்டு விழுந்து கிடந்தது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சுகுமார், வன பாதுகாவலர் கதிரவன், கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் வனக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நோயுடன் போராடிய அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் யானையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அப்பகுதியை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்ததால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 6 மணி அளவில் அந்த பெண் யானை செத்தது. இதையடுத்து வனத்துறை கால்நடை டாக்டர்கள் மூலம் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வயிற்றுக்குள் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் இருந்தது. இன்னும் ஓரிரு மாதத்தில் குட்டியை ஈன இருந்த நிலையில் யானை நோயால் இறந்ததும், வயிற்றுக்குள் இருந்த குட்டி யானையும் சேர்ந்து இறந்து இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் தாய் யானையின் வயிற்றில் இறந்த குட்டி யானையை வெளியே எடுத்தனர். பின்னர் தாய் மற்றும் குட்டி யானையின் உடல்களை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.