கர்நாடகத்தில் நாளுக்குநாள் வைரஸ் தாக்குதல் அதிகரிப்பு; ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்தது
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு,
சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் தொற்று இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதுபற்றி கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா வைரசுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 3 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வைரஸ் ஒரே நாளில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா நோயாளிகளின் விவரம் வருமாறு:-
பெங்களூருவை சேர்ந்த 40 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கொரோனாவால் பாதித்த ஒருவருடன் தொடர்பில் இருந்தவர். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 19 வயது இளம் பெண் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு கடந்த 22&ந் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூரை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைசூருவை சேர்ந்த 35 வயது இளைஞருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவர் கொரோனா பாதித்த ஒருவருடன் தொடர்பில் இருந்தவர். அவர் அதே போல் மைசூருவை சேர்ந்த 41 வயது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் ஏற்கனவே அந்த வைரஸ் தாக்கியவருடன் தொடர்பில் இருந்தவர். அவர்கள் இருவரும் மைசூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மங்களுரு திரும்பினார். அவருக்கு தற்போது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதே போல் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி மங்களூரு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கலபுரகியை சேர்ந்த 60 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி மூலம் அவருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 40 வயது நபர் துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த 20-ந் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு தற்போது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 62 வயது பெண்ணுக்கு வைரஸ் பரவியுள்ளது. அவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெங்களூரு 45 பேருடன் முதல் இடத்தில் உள்ளது. 14 பேருடன் மைசூரு 2-வது இடத்திலும், 9 பேருடன் சிக்பள்ளாப்பூர் 2-வது இடத்திலும் உள்ளன.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைபடுத்தி கண்காணித்து வருகிறோம். மூச்சுத்திணறல் பிரச்சினையுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்து தனியார் மருத்துவமனைகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த நோயாளிகளை மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் ரத்தம், சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.