போலியான காரணங்களை கூறிக்கொண்டு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
போலியான காரணங்களை கூறிக்கொண்டு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1,366 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மக்கள் வீதியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால் சாலைகளில் இன்னமும் காரணமே இல்லாமல் மக்கள் நடமாடி வருகிறார்கள். காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் போலியான காரணங்களை கூறிக்கொண்டு சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்துள்ளது. இதை மக்கள் முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி குறித்து மக்களிடம் ஏற்கனவே விளக்கி கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியம். இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வெளியில் செல்வது தப்பில்லை. ஆனால் வீதியில் சுற்றித்திரிவது என்பது தவறானது. மக்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் இதை கவனித்து கட்டுப்படுத்துவது அவர்களின் கடமை.
போலியான காரணங்களை கூறிக்கொண்டு தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றுவது, சாலைகளில் மத்தியில் நின்று செல்பி எடுப்பது போன்றவை தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கும். காவல்துறைக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
டெல்லியில் ஒரு அமைப்பினர் நடத்திய மாநாட்டில் பங்கேற்று திருப்பியவர்கள் திருப்பூர் மாவட்டத்திலும் இருக்கிறார்கள். மாநகர பகுதியில் 9 பேர், ஊரக பகுதியில் 30 பேர் என மொத்தம் 39 பேர் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அவரவர் வீடுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.