கேர்மாளம் சோதனைச்சாவடியில் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கேர்மாளம் சோதனைச்சாவடியில் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தாளவாடி,
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மற்றும் மாநில எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட், சிக்கலோ ஆகிய இடங்களில் இருந்து விளையும் காய்கறிகள் வேன் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான காய்கறி வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக திருப்பூர், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு செல்கின்றன.
தமிழகம், கர்நாடகம் இடையே காய்கறி வாகனங்களுக்கு தமிழக அரசு பாஸ் வழங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்தும் தாளவாடியில் இருந்தும் காய்கறி பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அதேபோல மாநில எல்லையான கேர்மாளத்திலும் கர்நாடக சோதனைச்சாவடி வழியாக காய்கறி வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர்.
இது குறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி, போலீஸ் சூப்பிரண்டு அனந்த நாராயணன், உதவி ஆணையாளர் நிகிதா ஆகியோர் கேர்மாளம் அருகே உடையார்பாளையம் சோதனைச்சாவடிக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், கர்நாடகத்தில் விளையும் காய்கறிகள் தமிழகத்தில் விற்பனையாவதால் தமிழக காய்கறி வேன்களை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டனர்.