மாநகராட்சிக்கு கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்கள் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினார்கள்
ஈரோடு மாநகராட்சிக்கு கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்களை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு வழங்கினார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஈரோடு மாநகர பகுதிக்கு உள்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டியதும் உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் ஏற்கனவே கொசு மருந்து தெளிக்க பயன்படுத்திய கருவிகளை வைத்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதில் பெரும்பாலான உபகரணங்கள் பழுதடைந்து, தூய்மை பணியாளர்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வரும்போது கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்கள், கருவிகள் போதிய அளவில் இல்லாதது பணியில் தேக்கத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்த ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.வி.ராமலிங்கம் மற்றும் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.எஸ்.தென்னரசு ஆகிய 2 பேரும் தங்கள் சொந்த நிதியில் இருந்து ஈரோடு மாநகராட்சிக்கு 20 மோட்டாருடன் கூடிய நவீன கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்கள். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம்.
இந்த எந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கிருமிநாசினி தெளிக்கும் எந்திரங்களை பெற்றுக்கொண்ட ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் அவற்றை 4 மண்டல தூய்மை பணியாளர்களுக்கும் தலா 5 வீதம் பிரித்து வழங்கினார். இந்த நவீன எந்திரத்தில் ஒரு நேரம் 11 லிட்டர் அளவுக்கு கிருமி நாசினி கலவை வைக்க முடியும். 5 மீட்டர் தூரம் வரை கிருமி நாசினியை பீய்ச்சி அடிக்கும் வசதி உள்ளது.