பொழிச்சலூரில் மூதாட்டியின் மகனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு - சுகாதார பணிகள் தீவிரம்

பொழிச்சலூரில் மூதாட்டியை தொடர்ந்து அவரது மகனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர சுகாதார பணிகளை மேற்கொள்ளும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-31 22:45 GMT
தாம்பரம், 

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் 73 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற பொழிச்சலூரில் உள்ள தாஸ் நர்சிங்ஹோம் என்ற ஆஸ்பத்திரிக்கும், ஸ்கேன் எடுத்த தாம்பரம் இந்தியன் ஸ்கேன் சென்டருக்கும் வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன், கடந்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 13-ந்தேதி வரை கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். இதனால் அவரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பரிசோதனை செய்தனர்.

அதில் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. மேலும் பொழிச்சலூரில் உள்ள அவருடைய மனைவி, குழந்தைகள், தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சுகாதார பணிகள் தீவிரம்

பொழிச்சலூரில் தாய், மகன் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அந்த பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார துறையினர், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் முகாமிட்டு தீவிர சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

பொழிச்சலூரில் தாய், மகன் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளோம்.

இந்த பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசித்த 9 தெருக்களில் உள்ள 486 வீடுகளில் வசிக்கும் 1,454 பேர் மருத்துவக் குழுவினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 12 மருத்துவ குழுக்கள், சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். பொழிச்சலூர் பகுதி முழுவதுமே தீயணைப்பு துறையினர், உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொழிச்சலூர் பகுதிக்கு வெளி ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்