கொரோனா தடுப்பு பணியில் ஒரு சதவீதம் கூட பின்வாங்க கூடாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உத்தரவு
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட பின்வாங்க கூடாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை பணி குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாவட்ட காவல்துறையினர் மற்ற இடங்களில் போல் இல்லாமல் அமைதியான முறையில் தங்கள் பணிகளை செய்து கொரோனா குறித்த பாதிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறி வருவது பாராட்டக்குரியது. சிவகாசி தாலுகாவை பொறுத்தமட்டில் அதிகாரிகள் எடுத்த பல்வேறு துரித நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு தடுக்கப் பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை நகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொண்டு துப்புரவு பணிகளையும், வாருகால்களில் சேர்ந்துள்ள மண்ணையும் அகற்றலாம். இந்த பணிகளை செய்தால் அடுத்து வரும் நாட்களில் வாருகால்கள் அடைப்பு ஏற்படாது.
இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைக்கான பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. மாவட்டம் முழுவதும் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த பணியில் எவ்வித தொய்வும் இருக்க கூடாது. அவர்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. அதே போல் தீயணைப்பு வாகனங்களை கொண்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து நடக்க வேண்டும். சுழற்சி முறையில் ஆட்களை நியமித்து இந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் நாம் ஒரு சதவீதம் கூட பின்வாங்க கூடாது. நாம் 100-க்கு 100 சதவீதம் உழைக்க வேண்டும். அப்போது தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நமக்கு அளித்த பணியை நாம் செய்ததாக கருதவேண்டும். எனவே அதிகாரிகள் அனைவரும் தற்போது உள்ள அதே நிலையை தக்க வைத்துக்கொள்ள மீதம் உள்ள நாட்களிலும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த 2 வாரம் மட்டும் நாம் கடுமையாக உழைத்தால் மீதம் உள்ள நாட்கள் நிம்மதியாக இருக்கலாம். நமது மாவட்ட மக்களும் நோயின் பிடியில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை போலீீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், தீயணைப்பு அதிகாரி பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.கூட்டத்திற்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் சுரேஷ், துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்தின் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், நிவாரண தொகை 1000 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்க பொது மக்களை ரேஷன் கடைகளுக்கு வரவிடாமல் அவரவர் வீடுகளுக்கே சென்று கொடுக்கும் வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ., உதவி இயக்குனர் (தணிக்கை) உலகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதர், இன்ஸ்பெக்டர் மூக்கன், வட்டார மருத்துவ அலுவலர்கள் திருச்சுழி செந்தில குமார், நரிக்குடி ரெங்கசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரிக்குடி பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பூமயில் முத்துராமலிங்கம், முனியாண்டி, ராமலிங்கம், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், திருச்சுழி ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணகுமார், துணைத் தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.