வேளாண்மை துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனையகம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனையகத்தை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜா சேதுபதி நகரில் நடமாடும் காய்கறி விற்பனையகத்தை கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்திடும் நோக்கில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகில் என 3 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் ஒருங்கிணைப்போடு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து சிரமமின்றி காய்கறி வாங்கிடும் வகையில், நடமாடும் காய்கறி விற்பனையகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது ராமநாதபுரம் நகரில் 5 வாகனங்களில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நகரில் 50 நடமாடும் காய்கறி விற்பனையகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் காய்கறி விற்பனையகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கும்போது கூட்டமாக கூடாமல் 1 முதல் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சேக் அப்துல்லா, தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா, ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.