புளியங்குடியில் எலுமிச்சை மார்க்கெட் கடைகளுக்கு மாற்று இடம்
புளியங்குடியில் எலுமிச்சை மார்க்கெட் கடைகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.;
புளியங்குடி,
கொரோனா வைரஸ் காரணமாக தென்காசி மாவட்டம் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக மூடி மாற்று இடம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்த இந்த கூட்டத்தில் போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் 26 கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எலுமிச்சை மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளை மூடவும், அதற்கு மாற்று ஏற்பாடாக புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 13 கடைகளும், செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 13 கடைகளும் தற்காலிகமாக அமைத்து கொள்ளவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை எலுமிச்சை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கவும், தற்காலிக கடைகள் அமைக்கப்படும் பகுதியில் தினமும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியினை உறுதி செய்து கொள்ளவும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.