தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுமார் 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவை குறைந்து இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அனல் மின்நிலையங்களிலும் ஒரு மின்சார உற்பத்தி எந்திரம் மட்டும் இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
210 மெகாவாட்
அதன்படி தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2-வது மின்உற்பத்தி எந்திரம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 1, 3, 4 ஆகிய மின்சார உற்பத்தி எந்திரங்களில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி 210 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி கூறும்போது, ‘தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனல் மின்நிலைய வாசலில் கைகழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனல் மின்நிலையத்துக்குள் வரும் வாகனங்களுக்கு முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேபோன்று அனல் மின்நிலையம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
அனல் மின்நிலைய தீயணைப்பு வாகனம் மூலம் அனல் மின்நிலைய வளாகம், கேம்ப்-1, கேம்ப்-2 பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர். அவர்கள் முககவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கப்பல் மூலம் தடையின்றி கொண்டு வரப்படுகிறது‘ என்றார்.