அரசின் நடவடிக்கையால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
அரசின் நடவடிக்கையால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ரேஷன்கடைகளின் செயல்பாடுகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி எடுத்து செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு செயல்முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் மக்களை காப்பது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
மக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள். மக்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய குடும்ப அட்டைக்கு ரூ.1000, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அது வழங்கப்பட உள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தற்போது வரை பணியாற்றியதை போல, கொரோனா நோய் முற்றிலுமாக ஒழியும் வரை பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகம் வந்த அமைச்சருக்கு உடலின் வெப்ப அளவை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.