அவசர தேவைக்கு வாகன அனுமதி பெற ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் விஜயகார்த்திகேயன்
அவசர தேவைக்கு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதியை ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தாரிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கிய தொழிற்சாலைகளின் இயக்கம், அவற்றின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் மற்ற அனுமதியை கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மேற்கொண்டு வந்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சிரமம் அடைந்தனர்.
இதை தவிர்க்கும் வகையில் உணவு, மருந்து பொருட்கள் தயார் செய்யும் பணி உள்ளிட்டவைக்காகவும், திருமணம், இறப்பு, மருத்துவ தேவை உள்ளிட்டவைக்காகவும் வாகன அனுமதி கடிதம் பெற அந்தந்த ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் அலுவலகங்களில் நேரில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் அனுமதி அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இ-மெயில் மூலமாகவும் அனுமதி கடிதம் பெற விண்ணப்பிக்கலாம். தாராபுரம், காங்கேயம் தாலுகாவுக்கு தாராபுரம் சப்-கலெக்டர் அனுமதி வழங்கும் அதிகாரி ஆவார். அவரை rdodpm.tntpr@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவுக்கு திருப்பூர் ஆர்.டி.ஓ. அனுமதி வழங்குவார். அவரை rdotpr. tntpr@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு உடுமலை ஆர்.டி.ஓ. அனுமதி வழங்குவார். அவரை rdoudm.tntpr1@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையை இயக்குவது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தொழில் மைய மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் dictpr@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயாரிக்க வசதியாக இன்று(செவ்வாய்க் கிழமை), நாளை(புதன்கிழமை) ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் 2 அல்லது 3 ஊழியர்கள் மட்டும் அனுமதி பெற்று பணியாற்ற திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (பொது) pagen.tntpr@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாக பணியாளர்களின் பெயர் விவரம் குறித்த முழு தகவல்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.