திருச்சியில், போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு

திருச்சியில் குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-03-29 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி ஏர்போர்ட் வயர்லஸ்ரோடு அருகே உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேக்அப்துல்லா (வயது 28). இவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரெஜினா (26).

இவர்களுக்கு பாத்திமா என்ற 4 வயது பெண் குழந்தையும், உமர் என்ற 4½ மாத ஆண் குழந்தையும் உள்ளனர். லால்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சேக்அப்துல்லா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த திருச்சி ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததும், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சேக்அப்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியிட மாற்றமாகி வந்து ஒரு மாதமே ஆன நிலையில் சேக்அப்துல்லா தற்கொலை செய்து கொண்டது திருவெறும்பூர் போலீசாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்