வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை - திருச்சி அருகே பரிதாபம்

திருச்சி அருகே வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-03-29 22:15 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகில் உள்ள குழுமணி, மேலத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பெரியசாமி கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் நேந்திரன் வாழை கன்றுகளை பயிரிட்டு இருந்தார். அதை பராமரிக்க கடனும் வாங்கியதாக தெரிகிறது.

தற்போது வாழை மரம் நன்கு வளர்ந்து தார் அறு வடைக்கு தயாரானது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் விளைந்த நேந்திரன் வாழையில் சுமார் 500 தார் வெட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் நேந்திரன் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.10-க்கு மட்டுமே விலை போனதாக தெரிகிறது. கடன் வாங்கி ஒரு வருடம் கஷ்டப்பட்டு பராமரித்தும், போதிய விலை கிடைக்காததால் பெரியசாமி மனமுடைந்தார்.

இதனால் அவரால், வாங்கிய கடனையும் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தான் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்