ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக மின்னணு பயண அனுமதி சீட்டு - கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வணிகர்கள், பொதுமக்கள் வசதிக்காக மின்னணு பயண சீட்டு வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2020-03-29 22:00 GMT
ராணிப்பேட்டை,

144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், வணிகர்கள், மொத்த வியாபாரிகளிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களை போக்குவரத்து செய்யவும், பொதுமக்கள் மருத்துவ காரணங்களுக்காக பயணம் செய்யவும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இணையதள பயண அனுமதி சீட்டு வசதியை செய்துள்ளது.

8099914914 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் தங்களது தொலைபேசி எண்ணிற்கு, ஒரு இணைய தள இணைப்பு குறுந்தகவலாக பகிரப்படும். அதில் தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் (ஓ.டி.பி.) ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச்சொல் வரும். அதனை பதிந்து தங்களது பயணம் குறித்த விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன்பிறகு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மின்னணு பயண அனுமதி சீட்டு எஸ்.எம்.எஸ். இணைப்பின் மூலம் வந்து சேரும். இதில் அந்த அனுமதி சீட்டு செல்லத்தக்க காலம், நேரம், வாகன எண் முதலியன குறிப்பிட பட்டிருக்கும். இந்த பயண அனுமதி சீட்டை காவல்துறையினர் சோதனை சாவடிகளில் சோதனை செய்யும் பொழுது காட்டவேண்டும்.

பயண அனுமதிச் சீட்டு வணிகர்கள் தங்களது சரக்குகளை எடுத்து வரவும், பொதுமக்கள் மருத்துவ அவசர பயணத்திற்கு செல்லவும் மட்டுமே வழங்கப்படும். தவறான காரணங்களை தெரிவித்து பயண அனுமதி சீட்டு பெற்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் இதுகுறித்து விவரங்கள் அறிய தங்களது கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களை அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்