கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட ஹாசன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட ஹாசன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-03-29 23:39 GMT
ஹாசன், 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யும் சுகாதாரத் துறையினர், அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஷரவணபெலகோலா அருகே மஞ்சேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விகன்கந்தா (வயது 55). இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

கொரோனா வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், மும்பையில் இருந்து வந்த அவரை பரிசோதித்த சுகாதாரத் துறையினர், அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் எனக் கூறி அழியாத முத்திரையை பதிவிட்டனர். அத்துடன் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அவருக்கு அறிவுரை கூறியிருந்தனர்.

இதனால் மனம் உளைச்சலுக்கு ஆளான விகன்கந்தா நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை இதை அறிந்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றிதகவல் அறிந்ததும் ஷரவணபெலகோலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மும்பையில் இருந்து வந்ததால் தனிமையில் இருந்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு ஆஸ்துமா, சிறுநீரக கோளாறு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் என்ன காரணத்திற்காக இந்த முடிவை தேடிக்கொண்டார் என்பது தெரியவில்லை.

இ்ந்த சம்பவம் தொடர்பாக ஷரவணபெலகோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பையில் இருந்து வந்ததால் தனிமையில் இருந்து வந்த தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்