கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தென்காசி மாவட்டத்தில் 500 ஏக்கர் வாழைகள் நாசம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, தென்காசி மாவட்டத்தில் 500 ஏக்கர் வாழைகள் நாசமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.;

Update: 2020-03-29 22:15 GMT
தென்காசி, 

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பல்வேறு தரப்பிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 

அனைத்து இடங்களிலும் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரமே நசிந்த நிலையில் உள்ளனர். இதற்கு விவசாயிகளும் விதிவிலக்கு அல்ல. தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு நெல் மட்டுமல்லாமல் வாழை, தென்னை போன்றவை பயிரிடப்படுகின்றன. இந்த விவசாயத்தை நம்பி பல விவசாய குடும்பங்களும், தொழிலாளர்களின் குடும்பங்களும் வாழ்கின்றன.

தென்காசி அருகே உள்ள சீவநல்லூர் பகுதியில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது. இந்த வாழைகள் நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாழைத்தார்களை வெட்ட முடியவில்லை. வெட்டுவதற்கு ஆட்களும் வர முடியவில்லை. மேலும் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைகள் சரிந்து விட்டன. இவ்வாறு சுமார் 500 ஏக்கர் வாழைகள் நாசமான நிலையில் உள்ளது. 

இதில் மிஞ்சிய சிலவற்றை கேரள மாநிலத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால் அங்கும் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போல் வாழைகளுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சீவநல்லூரைச் சேர்ந்த விவசாயி பரமசிவன் கூறுகையில், ‘ஒரு வாழை வளர்வதற்கு 11 மாதங்கள் ஆகின்றன. இந்த வாழையை வளர்த்து ஒரு தார் எடுப்பதற்கு ரூ.200 செலவாகிறது. ஆனால் தற்போது ஒரு தார் ரூ.100-க்கு கேட்கிறார்கள். எனவே அரசு எங்களுக்கு நஷ்டமான வாழைகளுக்கு இழப்பீடு தரவேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்