கொரோனா வைரஸ் தடுப்பு: மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் - பொதுமக்களுக்கு கிரண்பெடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-03-29 05:05 GMT
புதுச்சேரி

கொரோனா வைரசை தடுப்பது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் மாநில அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அதேபோல் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பீதி இருப்பினும் வெளியே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திகளாக வெளியிட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தினமும் தெரிவித்து வருகிறார். பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியில் பேச உள்ளார். அவருடைய உரை முடிந்தவுடன் அதன் தமிழாக்கம் ஒளிபரப்பப்படும். இதில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய தகவல் வெளியிடப்படும்.

புதுச்சேரி மக்கள் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறார்கள். இதில் 90 சதவீதம் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் வெளியே வருகிறார்கள். அவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனர். புதுவை மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி 21 நாட்கள் (ஏப்ரல் 14-ந் தேதி வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் சில நாட்களை கடந்துவிட்டோம். மீதமுள்ள நாட்களை வீட்டை வீட்டு வெளியே வராமல் இருந்தால் கொரோனா வைரசில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் என அனைத்துறையினருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். இந்த துறைகளிடையே வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேசி நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது அனைவருக்கும் வீட்டில் பொழுதை கழிக்க நேரம் கிடைத்துள்ளது.

எனவே குடும்பத்தோடு பொழுதை கழிக்கலாம். உங்களுக்கு விருப்பமான செயல்களை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1031 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். வருகிற 5-ந் தேதி நான் உங்க ளுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி மூலமாக பேசுவேன். பொதுமக்கள் கருத்துகள் குறித்து பேசலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்