ஊட்டியில், சமூக இடைவெளி அமைக்காத 3 கடைகளுக்கு ‘சீல்’ - டீ விற்கப்பட்ட ஆவின் பாலகமும் மூடப்பட்டது
ஊட்டியில் சமூக இடைவெளி அமைக்காத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் டீ விற்கப்பட்ட ஆவின் பாலகமும் மூடப்பட்டது.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்த கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றவரிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.
மேலும் காய்கறி, மளிகை கடை வியாபாரிகள், அவர்களது ஏற்பாட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கோடுகளை வரைய வேண்டும். கடையின் முன்பாக கை கழுவுவதற்கு தண்ணீர், சோப்பு வைக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை செய்யாத கடைகளை திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று கலெக்டர் உத்தரவிட்டார். டீக்கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க டீக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட உத்தரவினை கடை வியாபாரிகள் கடைப்பிடிக்கிறார்களா? என்று ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள 2 பேக்கரிகளில் சமூக இடைவெளி அமைக்காததால் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கியதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் பொதிகைநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்சன், அருண் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பேக்கரிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கோடுகள் வரையாததும், அங்கு வருகிறவர்களுக்கு கை கழுவ ஏற்பாடு செய்யாததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேக்கரிகளையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்ததை தொடர்ந்து, அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி அமைக்காத ஒரு மளிகை கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊட்டியில் நேற்று சமூக இடைவெளி அமைக்காத 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.