கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு உடை
கொரோனா வைரஸ் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு உள்ளது.
கோவை,
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்ய மாநகர போலீசாருக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு உதவ போலீசார் இந்த பாதுகாப்பு உடையை அணிந்து செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 20 போலீசாருக்கு இந்த பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் போலீசார் இந்த பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் மறைத்தபடி இந்த பாதுகாப்பு உடை இருக்கும்.
மேலும் கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது என்று சந்தேக நபர்கள் யாராவது இருந்தாலும் அவர்களை மீட்க சுகாதாரத்துறை அதிகாரிகள் செல்லும்போது அவர்களுடன் செல்லும் போலீசாரும் இந்த பாதுகாப்பு உடையை அணிந்து இருப்பார்கள். தற்போது 20 பேருக்கு மட்டும் இந்த உடை வழங்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் மேலும் பலருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.