திருச்சியில் பேராசிரியை கடத்தல் வழக்கு: 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் கைது

திருச்சியில் பேராசிரியை கடத்தல் வழக்கில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2020-03-28 22:45 GMT
மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி ஆண்டார் வீதி பகுதியில் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆம்புலன்சில் வந்த ஒரு கும்பல் பேராசிரியையை கடத்திச்சென்றது.

பின்னர் அவர் தப்பித்து வந்து கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பேராசிரியையை கடத்தியது, மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. பொருளாளர் வணக்கம் சோமு மற்றும் அவருடைய நண்பர்கள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வணக்கம் சோமுவின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வணக்கம் சோமு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சோமு, திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை அங்கு சென்று, வணக்கம் சோமுவை கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர், அவரை திருச்சி ஜே.எம்.5 மாஜிஸ்திரேட்டு பாலகிருஷ்ணன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். வணக்கம் சோமுவிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, வருகிற 9-ந்தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்