நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் இறந்த 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருந்ததா? டீன் சுகந்தி ராஜகுமாரி விளக்கம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இறந்த 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருந்ததா? என்பது குறித்து டீன் சுகந்தி ராஜகுமாரி விளக்கம் அளித்தார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். அந்த 3 பேருக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம். இதை பற்றிய தவறான வதந்திகள் பரப்பப்படுகிறது.
மரிய ஜாண் என்ற 66 வயது முதியவர் இறந்துள்ளார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக நீரழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயும் இருந்து வந்தது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுநீரகங்கள் செயல்படவில்லை. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அவர் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் எந்த நோயாளி சிரீயசாக இருந்தாலும் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கும்படி வெளியில் உள்ள டாக்டர்கள் வலியுறுத்துவதால், கொரோனா விழிப்புணர்வோடு, யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனநிலையில் அவர்களை தனித்தனி அறைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். 27-ந் தேதி இரவு 11.50 மணிக்கு மரிய ஜாண் இறந்துள்ளார். அவருடைய மரணத்துக்கு காரணம் சிறுநீரக பிரச்சினை ஆகும். எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்து இருக்கிறோம்.
மற்றொருவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர். அவருக்கு வயது 24. இவர் 27-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்று இதுவரை எங்களுக்குத் தெரியாது. அவரிடம் கேட்டபோது இல்லை என்று சொன்னார். அவருக்கு 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு நோய்த்தொற்று ஏற்பட்டு மூச்சுவிடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் நோய்க்கிருமி தொற்று ரத்தத்தில் கலந்து பல உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதனால் அவர் நேற்று காலை 8.30 மணிக்கு இறந்தார். அவருக்கும் ரத்த மாதிரி எடுத்து அனுப்பி உள்ளோம். அவருக்கும் ரத்த பரிசோதனை முடிவு வரவில்லை. அடுத்து 2 வயது ஆண் குழந்தை. இந்த குழந்தைக்கு பிறவி குறைபாடு உள்ளது. கால்சியம் மெட்டபாலிசத்தில் ஏற்படக்கூடிய குறைபாடு. இந்த மாதிரியான குழந்தைகளுக்கு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும். அடிக்கடி சளிப் பிடிக்கும். இந்த குழந்தை பிறந்ததில் இருந்தே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த குழந்தையை 28-ந் தேதி (அதாவது நேற்று) காலை 6.10 மணிக்கு ஆபத்தான நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். 10.30 மணிக்கு அந்த குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தைக்கும் வெண்டிலேட்டருடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டது. பிறவி எலும்பு குறைபாடு காரணமாக இந்த குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தைக்கும் ரத்தம் மற்றும் சளி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் நான் பேசினேன். இங்கு அதிக நோயாளிகள் வருவதால் இந்த பரிசோதனைக்கூடம் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் இந்த பரிசோதனைக்கூடம் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவரைக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பிறநோயாளிகள் என 51 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்து இறப்பவர்களை மருத்துவ முறைப்படி மூன்றடுக்கு உறையில், பிளச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களால் பொதிந்துதான் இறுதிச்சடங்கு நடத்துவதற்கு உறவினர்களிடம் கொடுக்கிறோம். மேலும் அவர்களிடம் இறுதி சடங்குகள் நிறைவேற்றும் முறைகளையும் உறவினர்களுக்கு தெரிவிக்கிறோம். இந்த ஆஸ்பத்திரியில் 125 தனி அறைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை வார்டு உள்ளது. இதுதவிர 500 படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகளும் உள்ளன. இன்றைய (நேற்று) நிலவரப்படி கொரோனா வார்டில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட காலமாக சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று, ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டில் மொத்தம் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பணிக்கு வருபவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்து பணியாற்றுவார்கள். அவர்களுக்கு உணவு வசதி அனைத்தும் செய்து கொடுக்கப்படும். 3 நாட்களுக்கு பிறகு மற்றொரு டாக்டர்கள் குழு வந்து கொரோனா வார்டில் பணியாற்றுவார்கள். இவ்வாறு சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு டீன் சுகந்தி ராஜகுமாரி கூறினார்.