‘வெளியில் நடமாடுவதை தவிருங்கள்’ பொதுமக்களுக்கு, கலெக்டர் மலர்விழி வேண்டுகோள்
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் வெளியில் நடமாடுவதை தவிருங்கள் என்று கலெக்டர் மலர்விழி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த 396 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக அரூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சாலைகள், தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் பணியையும் அவர் பார்வையிட்டார். சாலைகளில் தேவையற்ற வகையில் நடமாடிய இளைஞர்களை எச்சரித்து உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் உதவி கலெக்டர் பிரதாப், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மலர்விழி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று நடமாடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
விடுமுறை என்று நினைத்து வெளியில் சுற்றுவதை கைவிட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை முழுமையாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள உத்தரவுகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். வீடுகளுக்குள் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.