திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிய பொதுமக்கள்
திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
ஊட்டி,
நகராட்சி மார்க்கெட்டில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 14 நுழைவுவாயில்கள் பூட்டு போட்டு மூடப்படப்பட்டு உள்ளது. 3 நுழைவுவாயில்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதோடு, அதனை மக்கள் வாங்கி செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நிற்க கோடுகள் போடப்பட்டது.
ஆனால் உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி இல்லாமல் வரிசையில் நின்றதோடு, கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை போலீசார், அதிகாரிகள் கண்காணித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டது. அங்கிருந்த 52 கடைகள் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் திறந்தவெளி சந்தையாக அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு கடையும் 3 மீட்டருக்குள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கடையில் இருந்து மற்ற கடைக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கு முன்பாக 10 வட்டங்கள் போடப்பட்டு உள்ளது. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்றாக கோடுகள் போடப்பட்டு உள்ளன.
அந்த வட்டங்களில் பொதுமக்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நின்று, முன்னால் நிற்பவர்கள் காய்கறிகள் வாங்கி சென்ற பிறகு பின்னால் இருப்பவர்கள் வாங்குகின்றனர். மக்கள் வரிசையாக நின்று காய்கறிகள் வாங்குகிறார்களா என்பதை போலீசார் ரோந்து சென்று கண்காணிக்கின்றனர். முன்னதாக திறந்தவெளி சந்தைக்கு வருகிறவர்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்படுகிறது. நுழைவுவாயிலில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்களின் விலைப்பட்டியல்(கிலோவில்) வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் திறந்தவெளி சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கும் சமூக இடைவெளியை கடை பிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.