திருக்கோவிலூர் பகுதியில், வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திருக்கோவிலூர் பகுதியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-03-27 22:00 GMT
திருக்கோவிலூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை பயன்படுத்தி திருக்கோவிலூர், திருப்பாலபந்தல், சங்கராபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி, வீடுகளில் பதுக்கி வைத்து 144 தடை காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர், திருப்பாலபந்தல், சங்கராபுரம் ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 3 பேருடைய வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்