மராட்டிய சிறைகளில் இருந்து 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க உத்தரவு - கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்வகையில், சிறையில் நெரிசலை குறைப்பதற்காக, மராட்டிய மாநில சிறைகளில் இருந்து 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-03-28 00:00 GMT
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. வீடுகளிலும், கடைகளிலும் ஒருவருக்கொருவர் போதிய இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிறைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருக்கும்போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, மராட்டியத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, சுமார் 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய உள்துறை மந்திரி அனில் தே‌‌ஷ்முக், உயர் போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தார்.

மராட்டியத்தில் மும்பை உள்பட 9 மத்திய சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆகவே, கைதிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால், இது கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்பதால், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மராட்டிய சிறைகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் கைதிகளை ‘அவசர பரோல்’ மூலம் விடுவிக்குமாறு அனில் தே‌‌ஷ்முக் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இருதரப்பினரும் அடங்குவர். 7 ஆண்டுகளுக்குள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகள், விடுவிக்கப்பட உள்ளனர்.

மேலும், ஒரு குறிப்பிட்ட குற்றச்செயலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனை காலத்தைவிட அதிக காலத்துக்கு விசாரணை கைதியாகவே இருந்து வரும் கைதிகளை முழுமையாகவே விடுதலை செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக அனில் தே‌‌ஷ்முக் தெரிவித்தார்.

கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். எந்தெந்த வகுப்பு கைதிகளை பரோலில் விடுவிப்பது என்று முடிவு செய்வதற்காக, ஒரு உயர்மட்ட குழுவை மராட்டிய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில், மாநில சட்டப்பணிகள் குழு தலைவர், உள்துறை முதன்மை செயலாளர், சிறைத்துறை இயக்குனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்