பொதுமக்கள் காய்கறிகள் வாங்க பெங்களூருவில் 5 இடங்களில் தற்காலிக மார்க்கெட் - மாநகராட்சி முடிவு

பொதுமக்கள் காய்கறிகள் வாங்க பெங்களூருவில் 5 இடங்களில் தற்காலிக மார்க்கெட் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Update: 2020-03-27 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 61 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருரு மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக 400-க்கும் மேற்பட்ட கிருமிநாசினி தெளிக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் முக்கிய சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ராஜாஜி நகர், உப்பார்பேட்டை, மகாதேவபுரா, எலகங்கா, பொம்மனஹள்ளி, தாசரஹள்ளியில் உள்ள ஆதரவற்றோர் மையங்களில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பபட்டு வருகிறது. பெங்களூருவில் 91 இந்திரா உணவகங்கள் மூலம் ஏழைமக்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க சிறப்பு ஏற்பாடாக 5 தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கலாசிபாளையம் மார்க்கெட், நேஷனல் கல்லூரி மைதானத்திற்கும், சாரக்கி மார்க்கெட் ஜரகனஹள்ளி மைதானத்திற்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் புலிகேசி நகரில் 2 மைதானங்களிலும், தெற்கு மண்டலத்தில் சுவாமி விவேகானந்தர் மைதானத்திலும் தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக இடைெவளியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்கப்படுகின்றன. பெங்களூரு மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்