வெளியில் நடமாடினால் நடவடிக்கை; ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரிக்கை
வெளியில் நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூரில் நேற்று போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் வீதி வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது கொரோனா வைரஸ் தடுப்புக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிகிறார்கள். அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அத்தியாவசிய தேவையான பொருட்கள் வாங்க வெளியில் வருபவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வரவேண்டும். கடைகள், மார்க்கெட்டுகளில் போதிய இடைவெளிவிட்டு நின்று பொருட்கள் வாங்கிச்செல்ல வேண்டும். தங்கள் வீடுகளின் அருகில் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் யாராவது இருப்பது தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடிக்கடி கைகளை நன்கு கழுவி சுத்தமாக இருங்கள் என்றார்.