கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகர் பகுதிகளில் 30 வாகனங்கள் இயக்கம்: போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகர் பகுதியில் 30 வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனை போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்தார்.

Update: 2020-03-27 22:00 GMT
திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் பலியாகி வருகிறார்கள். இந்தியாவிலும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கிருமி நாசினிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை வெளியில் வராமல் வீட்டில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் வருகிறது.

தற்போது 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்த மாநகர போலீசார் சார்பில் மாநகரப் பகுதிகளில் 30 கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் நேற்று புஷ்பா சந்திப்பில் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாநகர் முழுவதும் 30 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன், பொதுமக்கள் வசிக்கும் அனைத்து தெருக்களுக்கும் சென்று பால், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவை பொருட்களும் அருகில் எங்கு கிடைக்கும், எந்த நேரத்தில் சென்று வாங்கலாம் என்பதை அறிவிக்கவுள்ளன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியில் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் அரசு உத்தரவை மதிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 25-ந் தேதி உத்தரவை மீறி செயல்பட்ட ஒரு நிறுவனம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டு, போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் மாநகர போலீசாருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்