பவானி பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
பவானி பகுதியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பவானி,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், நேற்று திடீரென பவானி நகருக்கு வந்தார். அவருடன் பவானி தாசில்தார் பெரியசாமி, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், தலைமை பொறியாளர் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் வந்தனர்.
பின்னர் கலெக்டர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 56 பேர் குறித்த விவரங்களையும், அந்த வீடுகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து பவானி சொக்காரம்மன் அம்மன் நகர், பழனிபுரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 3 குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரா என்பதற்கான அடையாள முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதா எனவும் அவர்களின் முகவரி குறித்தும் விசாரணை நடத்தினார்.
மேலும் முகவரி மாற்றி கொடுத்து 14 பேர் யார் யார் என விசாரணை நடத்தும்படி தாசில்தார் பெரியசாமிக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு, அதில் சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? என்றும், அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் ஆணையரிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து பவானி பஸ் நிலையம் அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் 25 நபர்களுக்கு மேல் கூட்டமாக இருந்தது கலெக்டருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பல்பொருள் அங்காடியை கலெக்டர் மூட உத்தரவிட்டார்.