விதிமுறைகளை பின்பற்றாத மருந்து கடைக்கு சீல் - கலெக்டர் உத்தரவு

கீழக்கரையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றாத மருந்து கடைக்கு கலெக்டர் சீல் வைக்க உத்தரவிட்டார்.;

Update: 2020-03-27 21:00 GMT
கீழக்கரை,

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தீயணைப்பு வாகனம் மூலம் தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள மருந்துகடையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அந்த கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பு பொதுமக்கள் கை கழுவுவதற்காக தண்ணீர் மற்றும் சோப்பு ஆயில் கண்டிப்பாக வைக்க வேண்டும்.

ஒரு மீட்டர் இடைவெளிக்கு பிறகு கோடு போட வேண்டுமென்று அனைத்து கடை உரிமையாளர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, தாசில்தார் வீர ராஜா, சுகாதார வட்டார மருத்துவர் ராசிக்தீன், ஆய்வாளர் பூபதி, பொறியாளர் மீரா அலி, இளநிலை உதவியாளர் கார்த்திகேசுவரன், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஏர்வாடி தீயணைப்பு துறை அதிகாரி சம்பத்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்