“செய்தித்தாள் வினியோகம் செய்பவர்கள் பணியாற்ற தடை இல்லை” - நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் பேட்டி
“ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்தழைப்பு அளிக்க வேண்டும். செய்தித்தாள் வினியோகம் செய்பவர்கள் பணியாற்ற தடை இல்லை“ என்று நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கூறினார்.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் நேற்று 3-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறியதாவது:-
நெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு 3-வது நாளாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக நெல்லை மாநகரில் நேற்று முன்தினம் வரை 35 பேர் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர தேவையின்றி மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் ஆகியவற்றை ஓட்டிச்சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று அதிகமானோர் கூடிவிட்டனர். அவர்களிடம் போலீசார் காய்கறி வாங்குவதற்கு கூட்டமாக வந்து கொரோனா வைரசை வாங்கிச்சென்று விடாதீர்கள். வீட்டில் மனைவி, மக்கள் உள்ளனர். அவர்களுக்கு கொரோனாவை வாங்கி கொடுத்து விடாதீர்கள் என்று எச்சரித்து ஒழுங்குபடுத்தினர். மேலும் தினமும் மார்க்கெட்டுக்கு வராமல், 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதுதவிர மளிகை கடைகளில் இருந்து வீட்டுக்கே பொருட்களை அனுப்பி வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரிய கடைகளின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டு பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரே காம்பவுண்டுக்குள் அதிகமான வீடுகளில் வசிப்போர், ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவரும் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லக்கூடாது. அவர்களுக்குள்ளே பேசி தேவையான நாளில் குறிப்பிட்ட நபர் மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பத்திரிகை, தொலைக்காட்சிகள் வழக்கம்போல் செயல்படும். அவற்றுக்கு தடை இல்லை. மேலும், செய்தித்தாள்களை வினியோகம் செய்பவர்கள் பணியாற்றவும் தடை எதுவும் இல்லை. இதுதொடர்பாக போலீசாருக்கு தகுந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் தினமும் சென்று கண்காணிக்கிறார்கள். கொரோனா அறிகுறி இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், அவர்களை யாரும் தவறாக நினைக்க கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.