ஊரடங்கு உத்தரவு: கோவை, நீலகிரி மாவட்டங்கள் வெறிச்சோடின
ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்கள் வெறிச்சோடின.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
இதையடுத்து கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கோவையில் இயக்கப்படும் புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கோவையில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.
இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக் காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை மாநகர பகுதியில் உள்ள பஸ்நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதுபோன்று கோவையில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி, திருச்சி, சத்தி, மேட்டுப்பாளையம் ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது. ஒருசிலர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் அவ்வப்போது சென்று கொண்டு இருந்தனர்.
வாடகைக்கார்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. பொதுமக்கள் தங்களின் சொந்த காரில் வெளியே சென்றால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். ஒரு காரில் 5 பேருக்கு மேல் சென்றால் எங்கு செல்கிறீர்கள்? ஏன் வெளியே செல்கிறீர்கள்? முக்கிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
இரவு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
தமிழக-கேரள எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டது. நேற்று மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோவை-திருப்பூர் மாவட்டத்தின் எல்லையான காரணம்பேட்டையில் இருந்து அன்னூர் செல்லும் ரோட்டில் சோமனூர் அருகே நொய்யல் ஆற்றங்கரையில் போலீசார் தடுப்பு வைத்து அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வந்த வாகனங்களை உரிய சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். உரிய காரணம் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கோவை நகரில் 1,500 போலீசாரும், மாவட்டத்தில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவால் கோவையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கினர்.
இதேபோல நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியில் இருந்து பஸ்கள் ஓடவில்லை. அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஊட்டி நகரில் உணவகங்கள் நேற்று காலை முதலே மூடப்பட்டது.
இதனால் காலையில் உழவர் சந்தை நகராட்சி மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்கு மேல் ஊட்டியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. போலீசார் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் கூடலூரில் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதி ஆகும். தேயிலை தோட்டங்களில் ஒரு லட்சம் தொழிலாளர்கள், விவசாயத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்காது என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பலர் அங்கு குவிந்தனர். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை உள்பட சோதனைச்சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டன. அங்கு அதிகாரிகள் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மொத்தத்தில் ஊரடங்கு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்கள் வெறிச்சோடின.