வெளிநாடு சென்று விட்டு சேலம் திரும்பியவர்கள் தகவல் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

வெளிநாடு சென்று விட்டு சேலம் திரும்பியவர்கள் தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-24 00:00 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் இரும்பாலை சாலை அருகில் உள்ள சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் தனிமை வார்டுகள் மற்றும் அதே பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி தனிமை வார்டுகள் ஆகியவற்றை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாச கருவிகள், நுரையீரல் மற்றும் இருதய கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கான 9 படுக்கைகள் கொண்ட பிரிவு மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான 21 படுக்கைகள் கொண்ட பிரிவு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வார்டு அருகே காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்வதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வெளி நோயாளி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

மேலும் மேட்டூர், ஆத்தூர் மற்றும் ஓமலூர் ஆகிய 3 அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 5 படுக்கைகள் வீதம் 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர 6 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. பிற தனியார் ஆஸ்பத்திரிகளிலும், இச்சிறப்பு சிகிச்சைக்காக ஒவ்வொரு ஆஸ்பத்திரிகளிலும் உள்ள வார்டுகளில் 25 சதவீத வார்டுகள் ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதிக்கு பிறகு யாரேனும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு சேலம் மாவட்டத்திற்கு திரும்பி வந்திருப்பதை அறிந்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு வெளிநாடு சென்றுவிட்டு மாவட்டதிற்கு வருகை தந்தவர்கள், உரிய தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்