கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்: பொதுமக்களுக்கு கைகழுவும் முறை குறித்து பயிற்சி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

Update: 2020-03-23 21:45 GMT
சிவகங்கை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கண்டனூர் பேரூராட்சியில் உள்ள தெருக்கள், வங்கிகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிறுத்தம், பஸ்கள், ஏ.டி.எம். மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மாவட்ட உதவி இயக்குனர் ராஜா, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அரசு சித்தா மருந்தாளுனர் பொண்ணுகுமார் கலந்துகொண்டனர்.

இதேபோல் நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் நீலமேகம் தலைமையில் பஸ் நிலையம், வங்கிகள், சுகாதார வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வாணியங்குடி ஊராட்சியில் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

கல்லல் பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் ஊராட்சி தலைவர் ராம நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து வீதிகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் ஒன்றிய ஆணையாளர்கள் சரவணபவன், ஜஹாங்கீர், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், டாக்டர் கிஷோர் குமார், ஊராட்சி செயலர் கவுரி துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், சுகாதார பணியாளர்கள் மூலம் பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத் துறையினர், பொதுமக்களுக்கு கைகழுவும் முறை குறித்து பயிற்சி அளித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயநாதன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், சுமதி, மருத்துவ அலுவலர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெற்குப்பை வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கலந்துகொண்டு நோய் தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கனகாம்பூஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள், மிளகு, ஓமம், சுக்கு, வெற்றிலை, துளசி, தூதுவளை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் வழங்கப்பட்டது.

எஸ்.புதூர் அருகே வாராப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் கிராம நல அலுவலர் சுரேஷ், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார். முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்