உடையார்பாளையம் அருகே சாலையை முழுமையாக சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை

உடையார்பாளையம் அருகே சாலையை முழுமையாக சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-23 23:45 GMT
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தில் அம்பேத்கர் நகருக்கு செல்லும் சாலை உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த சாலையை தற்போது சீரமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் சாலையை முழுவதும் சீர் அமைக்காமல் சுமார் 219 மீட்டர் தூரம் மட்டும் சீரமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் 219 மீட்டர் சாலையை மட்டுமே சீரமைக்க முடியும் எனக்கூறி பழைய தார் சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற ஆரம்பித்தனர்.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், முழுமையாக அமைக்கப்படாத சாலை எங்கள் பகுதிக்கு தேவையில்லை என்றனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்