புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை
புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அதற்கு தகுந்தாற்போல் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, புதுவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கிட கடைகள் திறந்திருக்கும். குறிப்பாக உணவு பொருட்கள் கடை, மருந்து கடைகள், பால் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்று முதல்வர் நாராயண சாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி வரை, தமிழகம் உள்பட வெளிமாநில வாகனங்கள் வரத் தடை விதிக்கப்படுவதாக முதல் அமைச்சர் நாரயாணசாமி அறிவித்துள்ளார். இந்த உத்தரவின்படி பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் சேரவேண்டாம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.