யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக எஸ்சல் நிறுவன தலைவரிடம் அமலாக்கத்துறை விசாரணை

யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக எஸ்சல் நிறுவன தலைவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Update: 2020-03-21 23:53 GMT
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யெஸ் வங்கியில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதன் நிறுவனர் ராணா கபூரை கைது செய்தது. விசாரணையில் ராணா கபூர் மற்றும் குடும்பத்தினர் லஞ்சம் வாங்கி கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி கடன் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் யெஸ் வங்கியிடம் கடனை வாங்கி செலுத்தாத நிறுவனங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் யெஸ் வங்கியிடம் ரூ.8 ஆயிரத்து 400 கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாத எஸ்சல் நிறுவன தலைவர் சுபாஷ் சந்திராவிடம் நேற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

காலை 11 மணியளவில் மும்பை, பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சுபாஷ் சந்திராவிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

யெஸ் வங்கியிடம் கடன் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறையினர் ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல வேறு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

மேலும் செய்திகள்