தட்சிணகன்னடா மாவட்டத்தில் கர்நாடகம்-கேரளா எல்லை 31-ந்தேதி வரை மூடல்: கலெக்டர் தகவல்

தட்சிணகன்னடா மாவட்டத்தில் கர்நாடகம்-கேரளா எல்லை வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கலெக்டர் சிந்து பி.ரூபேஷ் கூறினார்.

Update: 2020-03-21 23:20 GMT
மங்களூரு,

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 240-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நோய்க்கு கர்நாடகத்தில் இதுவரை 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சில மாநிலங்கள் வெளிமாநில எல்லைகளை மூடி வருகிறது.

இந்த நிலையில் கேரளா மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. காசர்கோடு மாவட்டம் கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் அருகில் உள்ளது. இதனால் தட்சிணகன்னடா மாவட்டத்தில் கர்நாடகம்-கேரளா எல்லையை மூடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேஷ் நிருபர் களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ள கர்நாடகம்-கேரளா எல்லை மூடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை சனிக்கிழமை (நேற்று முன்தினம்) நள்ளிரவு 2 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும் எல்லை சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏதாவது அவசர தேவை என்றால் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதுபோல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநகர் முழுவதும் உள்ள மாநகராட்சி கிளை அலுவலகங்களும் மூடப்பட்டு உள்ளது. ஏதாவது அவசர தேவைகள் இருந்தால் மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவுவாயிலில் வந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஷிப்டு முறையில் ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை மங்களூரு மாநகராட்சி கமிஷனர் அஜித்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்