ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 4 பேருக்கு சிகிச்சை கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-22 00:00 GMT
ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாய்லாந்து

ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பரிசோதனைக்காக இதுவரை 74 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 நாட்கள் தொடர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 41 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. அதன்பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 33 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கொல்லம்பாளையம் மசூதியில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனிவார்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

4 பேருக்கு பரிசோதனை

கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ஒருவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். கோபியில் மீட்கப்பட்ட 24 வடமாநில தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பஸ்கள்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் கர்நாடக மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்படும். ஒரு நாள் மட்டும் இந்த நடவடிக்கை அமலில் இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு 17 அரசு பஸ்களும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 36 அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதி வரை இயக்கப்படாது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார். இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உடனிருந்தார்.

கண்காணிப்பு கேமராக்கள்

ஈரோடு, கோபி அரசு ஆஸ்பத்திரிகள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வார்டுகளின் முன்பு கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்