வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த 34 பயணிகள், கள்ளிக்குடி சிகிச்சை மையத்தில் தீவிர கண்காணிப்பு

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த 34 பயணிகள், கள்ளிக்குடி சிகிச்சை மையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2020-03-22 00:30 GMT
திருச்சி,

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக துபாய், சார்ஜா போன்ற வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த 428 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 34 பேருக்கு சளி, காய்ச்சல் லேசாக இருந்ததால் கள்ளிக்குடியில் உள்ள கண்காணிப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 34 பேருக்கும் டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக உள்ளனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 7 பேர், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. அவர்கள் 10 நாட்களுக்கு மேல் தங்கி சிகிச்சை பெற்றதால், வீட்டில் தனிமையில் இருக்ககோரி அறிவுரை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு உடல் உபாதையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 பேர் மேற்கு வங்காளத்தில் ஒரே அறையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சளி, இருமல் இருந்தால் பரிசோதனைக்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3,469 பேருக்கு சோதனை

திருச்சி சின்னகம்மாள தெரு, பெரிய கம்மாள தெருவில் மராட்டிய மாநிலத்தில் இருந்து கூலி வேலைக்கு வந்தவர்கள் தங்கி உள்ளனர். அங்கு திருச்சி மாநகர நகர்நல அலுவலர் தலைமையில் 3 குழுக்கள் பரிசோதனை செய்தனர். பலர் சொந்த ஊர் சென்று விட்டனர். தற்போது இருப்பவர்களை வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்லி இருக்கிறோம். ஏனென்றால், அவர்களுக்கான ரெயில் ரத்து செய்யப்பட்டு விட்டது. தொடர்ந்து அவர்கள் காண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை கள்ளிக்குடி சிறப்பு சிகிச்சை கண்காணிப்பு மையத்தில் 191 பேரின் செல்போன் எண்கள் வாங்கப்பட்டிருந்தன. அவர்களில் 10 பேரிடம் நானே செல்போனில் பேசினேன். அனைவரும் நார்மலாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர். விமானங்களில் வந்த பயணிகளில் கடந்த 8-ந் தேதி முதல் இதுவரை 3,469 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தவறான தகவல்

கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, ஏதாவது தகவல் வந்தால் அதை உறுதி செய்து விட்டு செய்திகளை வெளியிடுங்கள். பீதியை ஏற்படுத்தும் வகையில் தகவலை பரப்ப வேண்டாம். எங்கேனும் குறைபாடுகள் இருந்து சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்