கரூர், குளித்தலையில் காய்கறிகள் விற்பனை மும்முரம்

இன்று ஊரடங்கையொட்டி, கரூர், குளித்தலையில் காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும் பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர்.

Update: 2020-03-21 22:30 GMT
கரூர், 

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் வீதிகளை வெறிச்சோட செய்து ஒவ் வொருவரையும் தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை நாடு முழுவதும் கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவித்ததன் பேரில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கினை கடைபிடிக்கும் வகையில், அத்தியாவசிய பொருட்களான காய் கறிகள், மளிகை சாமான்கள், பால் உள்ளிட்டவற்றை வாங்க நேற்று ஆர்வம் காட்டினர். அரசின் மறுஉத்தரவு வரும் வரை கரூர் பழையபைபாஸ் ரோட்டிலுள்ள உழவர் சந்தை பூட்டப்பட்டது.

எனினும் ஊரக பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் உழவர் சந்தை நுழைவாயில் முன்பு சாலையின் இருபுறமும் தரைக்கடை அமைத்து காய் கறிகளை வியாபாரம் செய்தனர். கரூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பொதுமக்கள் காய்கறிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் அந்த சாலையில் அவ்வப்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் காய்கறிகளை வாங்க திரண்டதால் உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, சற்று கூடுதல் விலையிலேயே காய்கறிகள் விற்பனையானது. இதேபோல் கரூர் காமராஜர் மார்க்கெட்டிலும் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடந்தது.

கரூர் வடக்கு நரசிம்மபுரம் உள்பட முக்கிய வீதிகளில் பால் விற்பனை நடந்தது. ஒரு லிட்டர் பால் ரூ.44 வரை விற்பனையானது. கரூர் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தினுள் துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினியை தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்ட பின்னர் தான் அங்கு அலுவலர்கள் உள்ளே பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்த போதும், டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. மது வாங்க வருவோர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கடை முன்பு கோடு போடப்பட்டிருந்தது. அதன்படி நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நின்றபடியே மதுவினை வாங்கி சென்றனர்.

இதேபோல், கரூர் ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிக்கெட் வினியோகிக்கும் பணியாளர், நிலைய மேலாளர் என ஊழியர்கள் பலரும் முக கவசம் அணிந்தே பணி புரிந்தனர். ரெயில் நிலையத்தில் டீ, வடை விற்கும் நபர் கூட முக கவசம் அணிந்தே வியாபாரம் செய்ததை காண முடிந்தது. ஊரடங்கையொட்டி பஸ், ரெயில் ஓடாது என கூறப்பட்ட போதும் கூட, கரூர் வந்த ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தது. இதனால் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் ரெயில் நிலைய முன்பகுதியில் வைத்து பயணிகளுக்கு கைகழுவும் திரவம் வினியோகிக்கப்பட்டது. கைகழுவிய பின்னர் தான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ரெயில்நிலைய அலுவலகம், வளாகத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிதொல்லை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், மூடப்பட்டிருந்த போதும் கூட அங்கு சென்று இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியதை காண முடிந்தது. கரூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட குறைவான பயணிகளே போக்குவரத்தினை மேற்கொள்ள வந்து சென்றனர்.

கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் குளித்தலை உழவர் சந்தை நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் உழவர் சந்தைக்கு வெளியே உள்ள சாலையில் தரைக்கடைகள் போட்டிருந்த வியாபாரிகளிடமும், காவிரி நகர் பகுதியில் நிரந்தரமாக கடைவைத்திருக்கும் காய்கறி வியாபாரிகளிடமும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இனிவரும் காலங்களில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கடைகளும் மூடப்படும் சூழ்நிலை ஏற்படுமோ என அஞ்சி ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க குவிந்தனர். உழவர் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலையைவிட கூடுதலாக இருந்தபோதிலும், வேறுவழியின்றி தங்களின் குடும்ப தேவைக்காக கூடுதல் விலைகொடுத்து பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் பலர் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் கரூர் கிளை பணிமனையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வினியோகம் செய்யப்பட்டது. அதனை அணிந்தபிறகு தான், பஸ்சைகளை பணிமனையில் இருந்து அவர்கள் எடுத்து சென்றனர். மேலும் கைகழுவ சோப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையிலான சூரணம் வழங்கப்பட்டது. இதில் கிளை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்