மாநில எல்லை மூடல்: குமரி மாவட்ட அரசு பஸ்கள் களியக்காவிளையோடு நிறுத்தம்; கேரள வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

கேரள மாநில எல்லை மூடப்பட்டதால் குமரி மாவட்ட அரசு பஸ்கள் களியக்காவிளையோடு நிறுத்தப்பட்டன. மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த வாகனங்களை உள்ளே விடாமல் போலீசார் திருப்பி அனுப்பினர்.;

Update: 2020-03-21 22:30 GMT
களியக்காவிளை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் நேற்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்திலும் கேரள எல்லைகள் மூடப்பட்டன.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக கடந்த சில நாட்களாக பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் கேரள எல்லை மூடப்பட்டதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன.

இதேபோல் கேரள மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் களியக்காவிளையை அடுத்த கேரள மாநில எல்லையான இஞ்சிவிளை வரை இயக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக தமிழக எல்லையில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லக்கூடிய மக்கள் சுகாதாரத்துறையின் சோதனைக்கு பிறகு இஞ்சிவிளை சென்று அங்கிருந்து கேரள மாநில அரசு பஸ்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர்.

கேரள மாநில எல்லை மூடப்பட்டதையடுத்து அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்தது. வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் 50 பஸ்களில் நேற்று 10 பஸ்கள் மட்டுமே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை இயக்கப்பட்டன. மாலை நேரத்தில் சில பஸ்கள், கேரள மாநில பகுதிகளுக்கும் இயக்கப்பட்டுள்ளது. அந்த பஸ்சில் இருந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏதேனும் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது. மேலும் பஸ்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. பயணிகள் பரிதவித்ததால், சில பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் நேற்று மாலை கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை உள்ளே விடாமல் போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் போன்றவற்றுக்கும் நேற்று வந்த பயணிகளின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருந்தது. அவர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வந்தனர். இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததின் காரணமாக பஸ்களும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. குமரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு 580 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் நாகர்கோவில் ரெயில் நிலையங்களுக்கு வந்த ரெயில்களிலும் பயணிகள் குறைவான எண்ணிக்கையில் தான் பயணம் செய்தனர். இதனால் பரபரப்பாக காணப்படும் ரெயில் நிலையம் கூட்டம் இன்றி காணப்பட்டது. ரெயில்கள் மூலம் வந்திறங்கிய பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்