பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வெளியே செல்ல வேண்டாம்
அண்டை மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், சமையல் கியாஸ், இதர சரக்கு வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் மற்றும் தவிர்க்க இயலாத இறப்பு போன்ற காரணங்களுக்கான இலகுரக வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனமும் வந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழக எல்லைக்குள் உள்வரும் அனைவரும் நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
மாத்திரைகள் வினியோகம்
பொதுமக்கள் பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். பலசரக்கு, காய்கறி கடைகள் மூடப்படாது. நோய் அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நோயின் தாக்கம் இருக்கலாம். இதனால் அடுத்தவர்களுக்கு நோயை பரப்ப வாய்ப்புள்ளது. எனவே 2 வாரங்கள் சுய நோய் தடுப்பினை முழுமையாக அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே நோயின் தாக்கத்தில் இருந்து தங்களையும், பிறரையும் தடுக்க இயலும்.
நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தால் அடுத்த ஒரு மாத கால அளவிற்கு உரிய மாத்திரைகள் அனைத்தும் வீட்டிற்கே வந்து வினியோகம் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு நோயின் தாக்கம் இருக்கலாம் என்று சந்தேகித்தால் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அதன் பேரில் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகளுக்கு செல்லும்போது தங்களுடன் ஒரு நபரை மட்டும் அழைத்துச் செல்லவும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களையோ அல்லது குழந்தைகளையோ அழைத்துச் செல்ல வேண்டாம்.
வீட்டிற்குள் மற்றும் பணிபுரியும் இடத்தில் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் மறக்காமல் சோப்பினால் கைகளை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.