பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டியதை எதிர்த்து பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

பாதாள சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் தோண்டியதை எதிர்த்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-03-21 22:15 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் ரூ.121 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்காக திருப்பத்தூர்– திருவண்ணாமலை மெயின்ரோட்டில் இருந்து ஜார்ஜ் பேட்டைக்கு கழிவுநீர் உந்து நிலையம் (பம்பிங் ஸ்டே‌ஷன்) அமைக்க திருப்பத்தூர் உழவர் சேவை கூட்டுறவு சங்கம் (மஞ்சா குடோன்) அருகே தனியாருக்கு சொந்தமான காலியிடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க 20 அடி ஆழத்திலும் 30 அடி நீளத்திலும் பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ளவர்கள் ஒன்று திரண்டு பாதாளச் சாக்கடை பணி நடக்கும் இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். இங்கு கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க பள்ளம் தோண்டக்கூடாது. இதன் அருகே மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் குழாய் உள்ளது. மேலும் காலி இடத்தில் பக்கத்தில் பாம்பு புற்று உள்ளது. இந்தக் கோவிலில் வந்து நாங்கள் வணங்குகிறோம், ஆகையால் கழிவுநீர் கால்வாய் குழாய்கள் பதிக்கக் கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பேபி, மதன்லோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தற்போது எந்த போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, இந்த இடம் தங்களுக்கு உரிமை இல்லாத இடம், ஆகையால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்து, அப்புறப்படுத்தினர். பின்னர் பாதாள சாக்கடை பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்